டெல்லி வடக்குப் பகுதியில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும், உள்துறை அமைச்சகம் புதிய அதிகார மையமாக உருவெடுப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்றதில் இருந்து ஆளுநர்கள், முதல் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என வரிசை கட்டி உள்துறை மந்திரியை சந்திப்பது, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அதிகார மையமாக செயல்படுவது யார் என்பதற்கான புதிய பாதையை வகுத்துள்ளதாக அதிகார மட்டத்தில் பேசப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் முக்கிய அதிகார மையமாக நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி விளங்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று அமித் ஷா தொடர்ச்சியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தை முடித்து வெளியேறிய அமைச்சர்கள் எவரும் இது தொடர்பாக வெளியே இருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு உள்துறை மந்திரியுடன் தேநீர் சாப்பிட வந்தேன் என்று பியூஷ் கோயலும், காப்பி மற்றும் பிஸ்கட் சாப்பிட வந்தேனல என தர்மேந்திர பிரதானும் நகைச்சுவையாக கூறிவிட்டு நழுவி விட்டனர். எனினும் பின்னர் கிடைத்த தகவல் படி, கூட்டத்தில் நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்றதாக தெரிகிறது.
மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பல் துறை அமைச்சர்களுக்கிடையே நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்த போதும் இது போன்ற கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் உள்துறையுடன் தொடர்புடைய விவகாரங்களுக்காக மட்டுமே இருக்கும். அதைத் தாண்டி வேறு விசயங்களுக்காக நடந்த கூட்டங்கள் என்பது மிகவும் அரிதானதே என ராஜ்நாத் சிங்கின் கீழ் செயல்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பாதுகாப்புத் துறையை கொண்டிருந்த நிர்மலா சீதாராமன் இந்த முறை நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் எனும் சிறப்பை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
அமித் ஷா இது போன்ற கூட்டங்களை நடத்துவதன் மூலம் ஆட்சியில் மோடிக்கு அடுத்த அதிகார மையமாக அமித் ஷா'வே உள்ளதைத் தான் காட்டுகிறது என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவெடுப்பதில் ஒரு மந்த நிலை நிலவியது எனவும், தற்போதைய தலைமை மூலம் இனி அனைத்து முடிவுகளும் வேகமாக எடுக்கப்படும் என பெயர் குறிப்புட விரும்பாத உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில தசாப்தங்களாகவே மோடியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வரும் அமித் ஷா இரண்டு முறை மோடி பிரதமர் பதவியில் அமர மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
கடந்த 2014'ம் ஆண்டிலேயே அமித் ஷா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷா'வே மத்திய அரசில் பங்கு பெறும் அளவுக்கு தான் இன்னும் தகுதி பெற வில்லை என ஒதுங்கிக் கொண்டார். பிறகு ராஜ்ய சபை உறுப்பினரான போதும் ஊடகங்கள் முன் வைத்த இதே கேள்விக்கு சிரித்துக் கொண்டே, "என்னை தள்ளி விடாதீர்கள்" எனக் கடந்தார். அருண் ஜெட்லி விலகியதை அடுத்து அமித் ஷா'விற்கு நிதி அமைச்சகம் கொடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு உள்துறை அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்துறை அமைச்சர்களில் முடிவெடுக்கும் திறன கைவரப் பெற்றதில் சர்தார் வல்லபாய் படலே முதன்மையாக போற்றப்படுகிறார். அதற்குப் பிறகு அத்வானி அந்த இடத்தைப் பெற முயற்சி செய்தார். தற்போது வல்லபாய் படேலின் மண்ணிலிருந்து வந்த அமித் ஷா அத்தகைய பெருமையைப் பெறுவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: