கடந்த 2018'ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்தே தெலுங்கானா காங்கிரஸ் இன்னும் மீளாத நிலையில் தற்போது அக்கட்சியின் பெரும்பான்மை சட்டசபை உறுப்பினர்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைவது காங்கிரசிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தற்போது சட்டசபையில் 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரசில் 12 பேர் அதிருப்தி உறுப்பினர்களாக மாறி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு ஆதரவாக அக்கட்சியுடன் இணைத்துக் கொள்ள சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாசை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே தெலுங்கானா சட்ட மேலவையில் 4 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசில் 3 பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் ஐக்கியமாகினர்.

இதே சட்டசபையைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் 19 உறுப்பினர்களைக் காங்கிரஸ் கொண்டிருந்தால் அதருப்தி உறுப்பினர்கள் 12 பேர் கட்சி தாவினால் பதவியிழக்கும் நிலை நிலவியது. 

இந்நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நல்கொண்டா தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஹுசூர்நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உத்தம் குமார் ரெட்டி வெற்றி பெற்றதை அடுத்து நேற்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அதிருப்தி உறுப்பினர்கள் 12 பேரும் உடனடியாக சபாநாயகரைச் சந்தித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைத்துக் கொள்வதாக கடிதம் கொடுத்து விட்டனர்.

கட்சித் தாவல் தடைச்சட்டப் படி, குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவளித்தால் மட்டுமே பதவியை இழக்காமல் வேறொரு கட்சியில் இணைந்து கொள்ள முடியும்.

இதையடுத்து தெலுங்கானா காங்கிரஸ் தலைவரான உத்தம் குமார் ரெட்டி தலைமயில் காங்கிரசில் எஞ்சியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில், "தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சட்டவிரோதமாக எதிர்க்கட்சிகளின் குரல்வளையை சட்டசபையில் நெரிக்கும் செயலில் ஈடுபடுகிறது. மேலும் காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்க பெருமளவில் பணத்தை இறைத்துள்ளனர்" என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: