பஞ்சாப் மாநில காங்கிரசில் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து இருவருக்குமிடையே சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் இன்று நடத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு வராமல் பஞ்சாப் அமைச்சரவையில் பங்குபெற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவைக் கூட்ட புறக்கணிப்பை அடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேர்தல் தோல்விக்காக பஞ்சாப் அரசில் தன்னை மட்டுமே குற்றம் சுமத்தி தன்னை தனிமைப்படுத்துவதாக கூறினார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளிவந்த சில தினங்களில் இது தொடர்பாக கேப்டன் அம்ரிந்தர் சிங் தேர்தல் தோல்விக்கு நவ்ஜோத் சிங் சித்து தான் காரணம் என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக சித்து கருத்து தெரிவிக்கையில் தேர்தல் தோல்விக்கு அனைவரும் கூட்டாகவே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.

சித்து மேலும் கூறுகையில் "காங்கிரஸ் நகர்ப்புறங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் அம்ரிந்தர் சிங் என்னைக் குற்றம் சுமத்துவது முறையல்ல" எனக் கூறினார்.

தேர்தல் முடிவு வந்த பிறகு கேப்டன் அம்ரிந்தர் சிங் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், " அவரின் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளது. பட்டிந்தர் மற்றும் குருதாஸ்பூர் தொகுதிகளில் தோற்றதற்கு நகர்ப்புற வாக்குகள் தான் காரணம்" என்றார்.

ஏற்கனவே சித்து பாகிஸ்தானின் கர்த்தாப்பூர் சாலைத் திறப்பு விழாவில் பங்கேற்றது, பாகிஸ்தான் இராணுவ தளபதியைக் கட்டிப் பிடித்தது உள்ளிட்ட விவகாரங்களில் தன்னுடைய கசப்பை கேப்டன் அம்ரிந்தர் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய ஊடக சந்திப்புகளில் சித்துவின் நடவடிக்கைகள் தான் தேர்தலில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை காவு வாங்கியது எனக். கூறினார்.

மேலும். சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்துவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதும் இரண்டு பேருக்கும் இடையில் மோதலை அதிகரித்தது. சித்து வெளிப்படையாகவே இதற்கு அம்ரிந்தர் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பஞ்சாப் காங்கிரசில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: