உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று புண்ணிய பூமியான அயோத்தியில் ஏழடி உயர ரோஸ்வுட்டால் செய்யப்பட்ட ராமர் சிலையை திறந்து வைத்தார்.

இது அயோத்தியில் உள்ள சத் சன்ஸ்தன் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையை திறந்து வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் நரேந்திர மோடியை ஆசிர்வதித்து மீண்டும் பிரதமராக அருள் புரிந்த சந்த் சமாஜ்ஜிற்கு நன்றி கூறினார். நரேந்திர மோடி கடந்த மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏழடி உயர ராமர் சிலையானது கர்நாடகாவில் வடிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிலையைத் திறந்து வைத்து யோகி ஆதித்யநாத் பேசுகையில், "இந்த ஆண்டில் மிகப்பெரிய விசயங்கள் நடந்துள்ளது. நரேந்திர மோடியை ஆசிர்வதித்த ஞானிகளுக்கு நன்றி. பிரதமர் இந்தியாவை உலகின் சக்தி வாய்ந்த நாடாக நிச்சயம் மாற்றுவார்.

அயோத்தியில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடவுள் ராமர் பிறந்த புண்ணிய பூமியானது இந்த அயோத்தி. நாம் எல்லோருக்கும் தேசம் என்ற ஒரே சிந்தனை தான் இருக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதே நம் அனைவரின் விருப்பம்" என்று பேசினார்.

இந்த ஏழடி உயர ராமர் சிலையானது கர்நாடகாவில் உள்ள காவேரி கர்நாடகா சிலை வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ரோஸ்வுட்டால் ஆன இந்த சிலையின் மதிப்பு ₹35 இலட்சமாகும்.

இந்த ராமர் சிலை திறப்பை அடுத்து ராமர் கோயில் கட்ட வேண்டி இந்துத்வ இயக்கங்களின் அழுத்தம் பாஜக மீது அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் 15 முதல் 17 வரை அயோத்தியில் முகாமிடுகின்றனர். இது ராமர் கோயில் கட்டுவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: