இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் இணைந்து அதன் கிளையாக காஷ்மீரில் செயல்படும் அன்சர் ஹஸ்வத் உல் ஹிந் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவனாக செயல்பட்ட ஜாகீர் முஸாவை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதை அடுத்து அதன் புதிய தலைவராக ஹமீத் லெஹாரி என்பவன் நியமிக்கப்பட்டுள்ளான்.

முப்பது வயதே ஆன ஹமீத் லெஹாரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவன். ரம்ஜான் தினத்தன்று இது தொடர்பாக காணொளி வெளியிட்ட அந்த தீவிரவாத அமைப்பு ஜாகீர் முஸாவிற்கு பதிலாக இனி ஹமீத் லெஹாரி புதிய தலைவனாக செயல்படுவான் என்றும் காஸி இப்ராஹிம் காலித் துணைத் தலைவனாக செயல்படுவான் எனவும் அறிவித்துள்ளது.

ரம்ஜான் தினத்தன்று தீவிரவாதிகளான ஜாகீர் முஸா மற்றும் மசூத் ஆசாரின் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீநகரில் ஒரு குழு போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் பாதுகாப்புப் படையினருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

அல்கொய்தாவின் காஷ்மீர் பிரிவிற்கு கடந்த ஜூலை 27, 2017 முதல் தலைவனாக செயல்பட்டு வந்த ஜாகீர் முஸா அதற்கு முன்பு புர்கான் வானி 2016'ல் கொல்லப்பட்ட போது சில காலம் ஹிஜ்புல் முஜாகிதீனுக்கு தலைவனாகவும் செயல்பட்டுள்ளான்.

தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்டு தீவிரவாத இயக்கத்தை வழிநடத்திய இவன் பிரிவினைவாதிகளாக அறியப்படும் ஹூரியத் மாநாட்டு தலைவர்களையும், அவர்களின் மதச்சார்பற்ற காஷ்மீர் கொள்கைக்காக கடுமையாக எதிர்த்து வந்தான்.

இதி தொடர்பாக ஜாகீர் முஸா தாங்கள் இஸ்லாமிய அடிப்படையிலான சுதந்திர காஷ்மீருக்காகத் தான் போராடுகிறோம். மதச்சார்பற்ற காஷ்மீருக்காக அல்ல என்பதை முன்வைத்து ஹீரியத் மாநாட்டு தலைவர்களையும் எதிர்த்து செயல்பட்டான்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜலந்தரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் முறையாக செயல்பட்ட ஜாகீர் முஸா பஞ்சாப் மொகாலியில் உள்ள தேசிய புலனாய்வு மையத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்.

இந்நிலையில் கடந்த மே 23'ம் தேதி தெற்கு காஷ்மீரின் டிரால் கிராமத்தில் வைத்து பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டான். இந்நிலையில் காவல்துறை தரப்பில் ஜாகீர் முஸா கடந்த 2013'ம் ஆண்டு முதலே பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கடந்து 6 ஆண்டுகளாக அவனை தேடிவந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் அவனை சுட்டுக் கொன்றதை தரமான சம்பவமாக வர்ணித்துள்ளது.

 

మరింత సమాచారం తెలుసుకోండి: